முகப்பு
தமிழ்நாடு

கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி விவகாரம்: புகாரில் முகாந்திரம் இல்லை லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியதில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக தமிழக முதல்வர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியதில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது  வழக்குப்பதிவு செய்யக் கோரிய புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணையை முடித்து வைத்துவிட்டதாக லஞ்சஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு ஏரியல் வழித்தடம், பாதாள வழித்தடம் உள்ளிட்ட வழிகளில் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொண்ட பெரும்பாலான நிறுவனங்களை விலக்கி விட்டு குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று அச்சம் டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் நோய்த்தொற்றுப் பரவல் குறித்து கவனம் செலுத்தாமல், குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களைத் தேர்வு செய்யும் நோக்கத்தில் விதிகளை மாற்றம் செய்வதில் தமிழக அரசு கவனம் செலுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் விருப்பத்துக்கு இணங்க ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி முறைகேட்டில் ஈடுபட்ட முதல்வர், துறை அமைச்சர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த மே 11-ஆம் தேதி புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் நடராஜன், ஆர்.எஸ்.பாரதியின் புகாரில் முகாந்திரம் இல்லை என்பது புகார் குறித்த விசாரணையில் கண்டறியப்பட்டது. எனவே அந்த புகாரை முடித்து வைத்து அதுதொடர்பான அறிக்கை மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறைகள் நடந்து வருகிறது. எனவே ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறைகளில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்த நடைமுறைகள் யாருக்கு சாதகமாகவும் செயல்படவில்லை என தெரிவித்தார்.

இதுவரை யாருக்கும் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்காத நிலையில் முறைகேடு குற்றச்சாட்டு எப்படி எழும் என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான தகவல்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →