25,463-ல் 2,174: பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக ஒரேநாளில் 25 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக ஒரேநாளில் 25 ஆயிரத்துக்கும் மேலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தமிழகத்தில் அதிகளவில் மக்களிடையே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தமிழகத்தில் உள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டால், கடந்த ஒரு மாதத்தில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைவானதாக இருந்ததாகக் கருதப்பட்டு வந்தது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதுவே அடிப்படையானது என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக ஒரேநாளில் 25 ஆயிரத்துக்கும் மேலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 2,174 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 19 ஆயிரம் மாதிரிகளில் 1,500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் சுமார் 6,000 மாதிரிகள் கூடுதலாக பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கையும் சுமார் 600 அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் முழு பொது முடக்கம் அமலுக்கு வரவுள்ள நிலையில், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பது நல்ல பயனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வந்தால், கரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
| தேதி | மாதிரிகள் | உறுதி செய்யப்பட்டோர் | |
| 1. | 11 ஜூன் | 16,829 | 1,875 |
| 2. | 12 ஜூன் | 18,231 | 1,982 |
| 3. | 13 ஜூன் | 17,911 | 1,989 |
| 4. | 14 ஜூன் | 18,782 | 1,974 |
| 5. | 15 ஜூன் | 18,403 | 1,843 |
| 6. | 16 ஜூன் | 19,242 | 1,515 |
| 7. | 17 ஜூன் (இன்று) | 25,463 | 2,174 |
கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஆறுதல் தரும் வகையில் 1,515 ஆக குறைந்தது. குறிப்பாக பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இன்றைக்கு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிகை கூடினாலும், பரிசோதனை எண்ணிக்கையைக் கொண்டு பார்கையில் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கையில் பெரிதளவில் அதிகரிப்பு காணப்படவில்லை.