தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக , திமுக , மதிமுக , பாமக, மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தமிழக சுகாதாரத்துறை தொடா்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வரும் ஜூலை 9- ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடா்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக, மற்றும் தமிழக சுகாதாரத்துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்குககளை விசாரித்த உயா்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்காக தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில்மனுவில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றில், மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பின்பற்றக்கூடிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. எஸ்.சி.,எஸ்.டி., உள்பட அனைத்து பிரிவினருக்குமான இடஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ள அரசியல் கட்சிகள் அந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா்.அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜகோபாலன், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் எந்தவொரு உத்தரவும் பெறாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு நியதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு ஒரு நியதியா என வாதிட்டாா். அப்போது மற்ற மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்களும் வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT