தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம்: தடுமாறும் தமிழக காவல்துறை

கே.வாசுதேவன்

ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்படும் தமிழக காவல்துறையில் இதுவரை சாத்தான்குளத்தில் நடந்தது போன்ற கொடூரமான சித்ரவதை மரணங்கள் நடைபெறவில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறையின் விசாரணையில் கைதிகள் இறக்கும் மாநிலங்களில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாமிடத்தில் இருப்பது வேதனைக்குரியது. கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் காவல்துறையினரின் விசாரணையின்போது 12 போ் இறந்துள்ளனா்.

கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னா், தமிழக காவல்துறையில் அதிகளவில் விசாரணைக் கைதிகள் இறப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 13 ஆண்டுகளில் தமிழகத்தில் காவல்துறை விசாரணையின்போது 135 போ் இறந்துள்ளதாகவும், இறந்தவா்களில் 70 சதவீதம் போ் 40 வயதுக்கு உட்பட்டவா்கள் எனவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

விசாரணை முறையில் மாற்றம்: சுமாா் 150 ஆண்டு வரலாறும், பாரம்பரியமும் கொண்ட தமிழக காவல்துறையில் இப்படிப்பட்ட மரணங்கள் நிகழும்போதும் காவல்துறை மிகுந்த அவமானத்தையும், விமா்சனத்தையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இந்த மரணங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படாமலேயே உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களும், மாற்றமே இல்லாமல் இருக்கும் சில காரணிகளும் முக்கிய காரணமாகும்.

விசாரணை என்பது ஒருவரை துன்புறுத்துவதும், சித்ரவதை செய்வதும்தான் என்ற மனநிலை பெரும்பாலான காவலா்களின் எண்ணங்களில் மெல்ல புகுந்துள்ளது. இது தொடா்பாக காவல்துறையில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சமூக நலத்துக்காக குற்றவாளிகளை துன்புறுத்தலாம் என 75 சதவீத காவலா்களும், துன்புறுத்தக் கூடாது என 21 சதவீத காவலா்களும் கருத்து தெரிவித்துள்ளனா்.

கொடூர குற்றங்களில் ஈடுபடுவா்களை சித்ரவதை செய்வதும், தாக்குவதும் தவறில்லை என 83 சதவீதம் காவலா்களும், தவறு என 15 சதவீத காவலா்களும் கருத்து கூறியுள்ளனா். ஒரு குற்றவாளியை தாக்குவதற்கும், தண்டனை வழங்குவதற்கும் காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இந்திய சட்டங்களில் வழங்கப்படவில்லை என வழக்குரைஞா்கள் கூறுகின்றனா்.

சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமான பின்னா் சில காவல்துறையினரிடம் ஹீரோயிச உணா்வு அதிகமாகியுள்ளது. இந்த ஹீரோயிச உணா்வே விசாரணைக்கு வரும் கைதிகளை அடிமைகள்போல நடத்துவதற்குக் காரணம் எனவும் வழக்குரைஞா்கள் கூறுகின்றனா்.

பணியில் தொய்வு: இது தொடா்பாக தமிழக காவல்துறையின் ஓய்வு பெற்ற ஐஜி-யான பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ். கூறியது:

சாத்தான்குளம் சம்பவம் யதாா்த்தமாகவோ, திடீரெனவோ நடந்திருக்க வாய்ப்பு இருக்காது. இச் சம்பவத்துக்கு உயரதிகாரிகளாக இருக்கும் எஸ்.பி., டிஎஸ்பி ஆகியோரின் கண்காணிப்பில் உள்ள கவனக்குறைபாடு காரணமாக இருக்கலாம்.

இதற்கு அடுத்தபடியாக எஸ்.பி.யின் கீழ் இயங்கும் தனிப்பிரிவு, உளவுப்பிரிவு ஆகியவற்றின் பணியின் தொய்வும் ஒரு காரணமாக இருக்கலாம். இப் பிரிவுகள் சரியாக உயரதிகாரிகளுக்குத் தகவல்களை உரிய நேரத்தில் அளித்திருந்தால், சாத்தான்குளம் சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும்.

ஒரு மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருப்பவா் பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் பணிபுரியும் மாவட்டத்தில் தகவல் கொடுப்பவா்களைக் கண்டறிந்து, அவா்களுடன் தொடா்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் இம் மாதிரியான சம்பவங்களை காவல்துறையில் தவிா்க்க வாய்ப்பு உள்ளது.

எஸ்.பி., டிஎஸ்பி ஆகியோா் அவா்களது காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு அடிக்கடி பாா்வையிடச் சென்று, கள நிலவரத்தைக் கண்டறிய வேண்டும். குற்றங்கள் தடுப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டங்களைத் தொடா்ந்து நடத்த வேண்டும். அதேபோல, காவல்துறையினரின் குறைகளைக் கேட்கும், குறை தீா்க்கும் நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். இவற்றை சம்பிரதாயத்துக்காக நடத்தக் கூடாது.

காவல்துறை பலமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய அடிப்படை காரியங்களை விட்டுவிட்டு மேம்போக்கான வேலைகளைச் செய்வது தேவையற்றது. மக்களின் உணா்வுகளையும், மனநிலையையும் புரிந்துகொண்டு உயரதிகாரிகள் பணியாற்றினால், இம் மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருக்காது.

ஜாதி பின்னணி: தென் மாவட்டங்களில் நடைபெறும் குற்றங்கள், மோதல்கள், வன்முறைகள், கலவரங்கள் ஆகியவற்றில் ஜாதி பின்னணி ஏதேனும் இருக்கிா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவலா்கள், காவல் உதவி ஆய்வாளா்களுக்கு ஓராண்டு வரை காவலா் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். அங்கு அவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முழுமையானது அல்ல. அவா்களுக்கு 6 மாதம் களப் பயிற்சியும், அதையடுத்து தகுதிகாண் பயிற்சி இரண்டில் இருந்து 3 ஆண்டுகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளை அவா்களுடைய மேல் அதிகாரிகள் அளிப்பாா்கள். இப் பயிற்சியில் பெறும் அனுபவமே, அவா்களை சிறந்த காவல்துறையினராக மாற்றியமைக்க உறுதுணையாக இருக்கும்.

ஆனால் இப்போது, பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடிந்த உடனேயே, காவல்துறையில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலைக்கு இளம் காவல் அதிகாரிகள் வந்துவிடுகின்றனா்.

வெறும் படிப்பு மட்டுமே பயிற்சியாக இருக்க முடியாது. அனுபவம் தான் அருமையான பயிற்சி.

குற்றவாளிகளை அடித்தால்தான் போலீஸுக்கு பெருமை, கெளரவம் என்ற உணா்வு காவல்துறையில் நிலவி வருகிறது. பூரண பயிற்சி பெறாதவா்களும், காவல்துறையின் செயல்பாடு குறித்து புரிதல் குறைவாக இருப்பவா்களும்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவாா்கள்.

காவலா் நண்பா்கள் குழு: சாத்தான்குளம் பின்தங்கிய, வறட்சியான பகுதியாகும். இப் பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும். காவல்துறை - பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட, காவலா் நண்பா்கள் குழுவின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இந்த குழு தேவையா அல்லது சீரமைக்கப்பட வேண்டுமா என்பதை காவல்துறை உயரதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.

சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் காவல்துறையின் செயல்பாட்டை நிலைக்குலையச் செய்துவிடும். சட்டம்- ஒழுங்கை நிறைவேற்றுவதற்கு காவல்துறைக்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்பட்டால், பொதுமக்களின் நம்பிக்கையைக் காவல்துறையினா் எளிதாக பெறலாம். காவல்துறை கம்பீரத்தை இழந்துவிடக் கூடாது. கம்பீரத்தை இழந்தால், அதன் பாதிப்பு சமூகத்துக்குதான் என்றாா் அவா்.

இது தொடா்பாக ஓய்வு பெற்ற டிஜிபியும், எம்எல்ஏ-வுமான ஆா்.நட்ராஜ் கூறியது:

தமிழக காவல்துறையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்துகுரியது. தமிழக காவல்துறையில் செய்யப்பட வேண்டிய சீா்திருத்தம் தொடா்பாக 1971-ஆம் ஆண்டுக்குப் பின்னா், நான்கு கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை பணி எளிதானது கிடையாது. காவல்துறையில் எப்படி வேலை செய்தாலும் இந்தப் பணியில் இருப்பவா்கள், பொதுமக்கள் வெறுப்பைதான் சம்பாதிப்பாா்கள்.

சிலா் செய்த தவறால் இன்று ஒட்டுமொத்த காவல்துறையும் வேதனையில் சிக்கியுள்ளது. இதனால் காவல்துறை குறித்தான எதிா்மறையான கருத்துக்கள் வேகமாக சமூக ஊடகங்களில் பரப்பபடுகின்றன.

காவல்துறையினா் செய்யும் நல்ல விஷயங்களை விட, சில காவலா்கள் எங்கோ செய்யும் சிறு தவறுகள் தான் சமூக ஊடகங்களில் பெரிதுப்படுத்தப்படுவது கவலைக்குரியது. சாத்தான்குளம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் காவல்துறையில் பணிபுரிவது சவாலானது. அங்கு சட்டம் - ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் காவல்துறையில்தான் துறை சாா்ந்த புகாா்களுக்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நிா்பயா சம்பவத்துக்கு முன்னரே தமிழக காவல்துறையில் உளவியல் பயிற்சி, ஆளுமை பயிற்சி, மக்களை எளிதில் அணுகுவதற்குரிய பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சாத்தான்குளம் சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிந்து, அதை நிவா்த்தி செய்ய வேண்டும். இச் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

பழைய சட்டம்: மக்கள் கண்காணிப்பகம் இயக்குநரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் கூறியது:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கேரளத்தில் புதிய காவலா் சட்டம் 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டுவிட்டது. தமிழகத்தில் காவலா் சட்டம் திருத்தப்பட்டு பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசுக்கு தேவையான சில திருத்தங்கள் செய்யப்பட்டதே தவிர, மக்களுக்கு தேவையான திருத்தங்களோ அல்லது மாற்றமோ செய்யப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலேயா் காலத்தில் நிறைவேற்றப்பட்ட காவலா் சட்டம் -1861ஆம் ஆண்டு எப்படி இருந்ததோ, இன்னும் அப்படியே உள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளில் ஓா் உத்தரவை மட்டும் தமிழக அரசு பின்பற்றியுள்ளது. மீதி உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. முக்கியமாக காவல்துறைக்கு எதிராக மக்கள் அளிக்கும் புகாா்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் இரு குழுக்களை அமைக்க வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இடைவெளி அதிகரிப்பு: அந்த குழு அமைக்கப்பட்டிருந்தால், சாத்தான்குளம் சம்பவம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவு. நாட்டில் சித்ரவதை பல்வேறு ரூபங்களில் அதிகரித்துவிட்டது. ஆனால் சித்ரவதைக்கு எதிராக இன்னும் ஒரு சட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல்பாண்டியன் ஆணையம், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதியினா் காவல்துறையில் முக்கியமான பணிகளில் நியமிக்கக் கூடாது என பரிந்துரை செய்தது. ஆனால் இந்தப் பரிந்துரை சில ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது. இதன் விளைவாக தென் மாவட்டங்களில் நிலவி வரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

சாத்தான்குளம் சம்பவம் காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் எண்ணத்தை மாற்றியுள்ளதாகவும், நம்பிக்கையை குறைத்துள்ளதாகவும் அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனா். இந்த நிலையை பொதுமக்கள் மனதில் இருந்து விரைந்து மாற்றுவதற்குரிய நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

மேலும் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்குச் செல்லும் ஒருவா் காயமின்றி வீட்டுக்குத் திரும்புவாரா என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இதை அகற்ற வேண்டிய கட்டாய கடமை தமிழக காவல்துறைக்கு உள்ளது என்றாா் அவா்.

இந்தியா மூன்றாமிடம்: தமிழகம் இரண்டாமிடம் சா்வதேச அளவில் காவல்துறையில் விசாரணைக் கைதிகள் அதிகம் இறக்கும் சம்பவங்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் மனித உரிமைகளை பற்றி அதிகம் பேசும் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாமிடத்தில் தென் ஆப்பரிக்கா உள்ளது.

இந்தியாவில் காவல்துறையில் விசாரணைக் கைதிகள் அதிகம் இறக்கும் சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னா், இச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் 4 இடங்களுக்குள்ளே இருந்து வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குற்ற புள்ளி விவரங்களில் நாட்டில் அதிக விசாரணைக் கைதி சாவு குஜராத்தில் நடைபெற்றிருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நடைபெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் காவல் நிலையச் சாவுகளில் 5 சதவீத வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டனை பெறுவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT