FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது: அஜித் குமார் கொலை வழக்கில் ஆஜரான நிகிதா பேட்டி

நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது என நிகிதா கூறியது...

Updated On : 4 மார்ச் 2026, 3:23 pm IST
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரான பேராசிரியை நிகிதா.
பகிர்:

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரான பேராசிரியை நிகிதா, நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது என தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். அப்போது, தனிப் படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா். இதையடுத்து, தனிப் படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் திங்கள்கிழமை(பிப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மனுதாரா் சோ்க்கப்பட்டாா். அவா் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவாா். மேலும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயாராக உள்ளாா். அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு சிபிஐ தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரா் கோரும் நிவாரணத்தை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

நிகிதாவுக்கு நோட்டீஸ்

இந்த நிலையில், அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரையைச் சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைக்காக மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நிகிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

நிகிதா நேரில் ஆஜர்

அதன்படி, அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பு புதன்கிழமை நேரில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின் போது, நிகிதா அளித்த புகாரை முடித்து வைக்க உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

ஆட்சேபணை இல்லை

இதுகுறித்து நிகிதாவிடம் உங்களது கருத்து என்ன என நீதிபதி கேட்டதற்கு, எனக்கு எதுவும் ஆட்சேபணை இல்லை, எனது புகார் வழக்கை முடித்து வைக்கலாம் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உங்களுடைய கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா, நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் சமூக ஊடகங்களில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள்.

நடந்தது எதவும் தெரியாது

நகைகள் காணாமல் போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது.

ஆச்சரியமாக உள்ளது

எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்தது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. சிறப்பு காவல் பிரிவு அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்தவரை அஜித்குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார் என்று அவர் கூறினார்.

summary

I have no political background says Nikita, who appeared in the Ajith Kumar murder case....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments