தமிழ்நாடு

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

DIN


சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், "கரோனா நோய்த் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். 

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு தரப்பில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து தமிழர்களையும் மீட்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஜூலை 2) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT