தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பதற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பொன்றை அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் என அனைத்து தரப்பிலும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக கோயம்பேடு சந்தையிலிருந்து நிறைய பேருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, அடுத்த கரோனா மையமாக டாஸ்மாக் கடைகள் இருந்துவிடக் கூடாது என்கிற அச்சம் பொதுவெளியில் எழுந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனிநபர்களுக்கு மட்டும் மது விற்கப்படும் என்றும் இணையவழியில் விற்பனை செய்ய முடியாது என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மேலும், மது விற்பனையின்போது பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேசமயம், கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.