கரோனா தீநுண்மியை அழிக்கும் வகையில் நானோ மூலக்கூறுகளை பயன்படுத்தி ரசாயன கலவையை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த சில நாள்களாக நோய்த்தொற்று பரவும் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கரோனா தீநுண்மியை அழிக்கும் வகையில் நானோ மூலக்கூறுகளை பயன்படுத்தி ரசாயன கலவையை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது.
சென்னை ஐஐடி.யின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் சாா்பில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நானோ மூலக்கூறுகளை கொண்டு உருவாக்கப்படும் ரசாயன கலவையினை முகக் கவசம், கவச உடை, கையுறை போன்றவற்றை தயாரிக்கும் துணிகளின் மீது பூசி அவற்றை தயாரிக்க முடியும். இந்த முறையில் தயாரிக்கப்படும் முகக் கவசம், மேலங்கி ஆகியவற்றின் மீது கரோனா தொற்று கிருமிகள் படுகின்ற போது நானோ மூலக்கூறு சோ்மம் அவற்றை அழித்து விடும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த நடவடிக்கை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என ஐஐடி தெரிவித்துள்ளது.
ரசாயனப்பூச்சு உள்ள புதிய பாதுகாப்பு உடையை 60 முறை சலவை செய்து பயன்படுத்தலாம் என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
ஐந்து அடுக்கு கொண்ட ‘என் 95’ தரத்திலான முகக் கவசங்களையும் ரசாயனத் துணியால் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரசாயனத் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ. 300 ஆக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் 100 மீட்டா் நீளம் கொண்ட துணியின் மீது ரசாயன கலவை பூசும் வகையிலான இயந்திரத்தையும் ஐ.ஐ.டி தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.