முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே மதுபானக்கடை முன்பு பெண்கள் போராட்டம்; 7 பேர் கைது

திருவள்ளூர் அருகே திறக்கப்பட்ட மதுபானக் கடைக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

திருவள்ளூர் அருகே திறக்கப்பட்ட மதுபானக் கடைக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

தமிழக அரசின் உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 40 மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.  இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் உள்ள மதுபானக் கடைக்கு மெய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாது சென்னை,  சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெய்யூர், இராஜபாளையம், சோமதேவன்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கடையை முற்றுகையிட முயன்றனர்.

உடனடியாக தகவலறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊரடங்கு முடியும் வரை கட்டாயம் கடையை மூட வேண்டும் என்றும், சென்னையிலிருந்து வருபவர்களால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் காவல் துறையினர் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசின் விதிகளுக்கு உட்பட்டு உயரதிகாரிகளிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை ஏற்காத பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி கல்பனா தத் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டம் கலையாமல் கடையை முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் துறையிருக்கும் பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் உள்பட 7 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவத்தால் 10 மணிக்கு திறக்க வேண்டிய கடை 12 மணியளவிலே திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.