முகப்பு
தமிழ்நாடு

பாபநாசம் மலையடிவாரத்தில் 50 நாள்களில் பிடிபட்ட 5 சிறுத்தைகள்; தொடர் அச்சத்தில் பொதுமக்கள்

பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் 50 நாள்களில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் வனத்துறையினர் கூண்டில் பிடிபட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் தொடர் அச்சத்தில் உள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் 50 நாள்களில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் வனத்துறையினர் கூண்டில் பிடிபட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் தொடர் அச்சத்தில் உள்ளனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரகப் பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள கோரையார்குளம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டு வளர்ப்பு விலங்குகளான நாய், ஆடு உள்ளிட்டவற்றைத் சிறுத்தைகள் தாக்கித் தூக்கிச் சென்று வந்தன.

இதையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர். இதில் மார்ச் 24, ஏப். 12, ஏப். 26, மே 1 ஆகிய நாள்களில் நான்கு சிறுத்தைகள் சிக்கின. இந்நிலையில் தொடர்ந்தும் சிறுத்தைகளின் தாக்குதல் இருந்ததையடுத்து மீண்டும் அதே பகுதியில் வனத்துறையினர் மே 8ஆம் தேதி மீண்டும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர்.

இதில் மே 12 செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் ஒன்றரை வயதுள்ள பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் கயாரத் மோகன் தாஸ் அறிவுரையின் பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் கணேசன் தலைமையில் பாபநாசம் வனச்சரகர் கோ. பரத், முண்டந்துறை வனச்சரக அலுவலர் எம். சரவணகுமார், வனக்கால்நடை மருத்துவர் மனோகரன், ஆய்வாளர் அர்னால்டு, வனவர்கள் மோகன், ஜெகன்  பயிற்சி வனச்சரக அலுவலர்கள்  ராம்பிரகாஷ், ரவிபெருமாள், அஜய், தினேஷ், சம்பத் வனக்காப்பாளர்கள் தருணியா, அர்ஜுனன், வனக்காவலர்கள் செல்வம், சாந்தா, வேட்டைத் தடுப்பு காவலர் கார்த்தி மற்றும் வனக்கால்நடை மருத்துவக் குழு ஆகியோர் அடங்கிய தனிக் குழுவினர் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட கொடமாடி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

ஒரே கிராமத்தில் தொடர்ந்து 50 நாள்களில் 5 சிறுத்தைகள் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளது அந்தப் பகுதி கிராம மக்களிடையே மனதளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் அதே பகுதியில் மேலும் சிறுத்தைகள் இருப்பதாகவும் அவை ஊருக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்கும் பணியினை மட்டுமே செய்து வருகிறார்கள்.

மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க உரிய நடவடிக்கை  விரைந்து எடுக்க வேண்டும் என்று செட்டிமேடு, வேம்பையாபுரம், கோரையாறு குளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →