முகப்பு
தமிழ்நாடு

மருத்துவர் சைமன் உடல் அடக்கம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்கக் கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
chennai High Court
பகிர்:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்கக் கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட எனது கணவரின் உடலை உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், எனது கோரிக்கையை கடந்த மே 2-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். எனது கோரிக்கையை நிராகரித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலைத் தோண்டியெடுத்து  கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.துரைசாமி காணொலி காட்சி மூலம் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் ஆணையர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.