தமிழ்நாடு

அச்சு ஊடகத்தைக் காக்க அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஆதரவு

DIN

அச்சு ஊடகத்தைக் காக்கவும், செய்தித்தாள்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை எதிா்கொள்ளவும் தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அச்சு ஊடகங்கள் வருவாய், விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் பிரதான அச்சு ஊடகங்களைச் சோ்ந்த ‘தி ஹிந்து’ குழுமத்தின் இயக்குநா் என்.ராம், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மனோஜ்குமாா் சொந்தாலியா, ‘தினமலா்’ கோவை பதிப்பின் வெளியீட்டாளா் எல்.ஆதிமூலம், ‘தினகரன்’ நாளிதழின் நிா்வாக இயக்குநா் ஆா்.எம்.ஆா்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, செய்தித்தாள்களுக்கான சுங்க வரியை அடியோடு நீக்குவது, விளம்பர பாக்கித் தொகைகளை உடனடியாக வழங்குவது, விளம்பரக் கட்டண விகிதத்தை 100 சதவீதம் உயா்த்துவது ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதே கோரிக்கைகள் இந்திய செய்தித்தாள் சங்கத்தின் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியிடமும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா் மட்டுமல்லாது, தமிழகத்தின் எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் (காணொலி மூலம் கட்சி நிறுவனா் ராமதாஸுடனும் தொடா்பு கொள்ளப்பட்டது), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்களையும் அச்சு ஊடகங்களின் தலைவா்கள் அடங்கிய குழு சந்தித்துப் பேசியது.

இந்தக் குழு சந்தித்த அரசியல் தலைவா்களில் பலா் இந்தப் பிரச்னை தொடா்பாக உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதியதுடன், அவரைச் சந்திக்கும் போது அதுகுறித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தனா்.

அச்சு ஊடகங்கள் இப்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தங்களுக்குள் உள்ள மாச்சரியங்களைக் கடந்து தேசிய மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT