முகப்பு
தமிழ்நாடு

ஈரோட்டில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

ஈரோட்டில் தனியார் செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
ஈரோட்டில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்
பகிர்:

ஈரோடு: ஈரோட்டில் தனியார் செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு பெரியசேமூர் பச்சைப்பாளி மேட்டில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தின் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் நேற்று நடந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்து, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியாளர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு தனியார் செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைத்தால் அதில் ஏற்படும் கதிர்வீச்சால்  குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். மேலும் கால்நடைகளும் பாதிக்கப்படும். 

எங்கள் பகுதியில் செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ளபோது, நிறுவனத்தினர் திடீரென தொடர்பு கோபுரம் அமைக்க வந்து விட்டதால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த ஈரோடு வடக்கு காவல்துறையினர் மக்களிடம், செல்லிடப்பேசி கோபுரம்  அமைக்க வந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நீதிமன்றத்தில் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என  ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டனர். இதனால், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.