அறிக்கையில் அரசியல் செய்கிறார், லாட்டரி பற்றி ஸ்டாலின் பேசக் கூடாது: அமைச்சர் சி.வி. சண்முகம்
லாட்டரி தடை பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம்: லாட்டரி தடை பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பகுதியில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக ரூ.19 கோடி மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணிக்கு அமைச்சர் சிவி சண்முகம் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் லாட்டரி சீட்டால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் முதலில் லாட்டரியை தடை செய்தார். ஆனால் தினந்தோறும் அறிக்கையில் மட்டும் அரசியல் செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின், லாட்டரிக்கு தடை வேண்டுமென அக்கறையோடு கேட்டிருக்கிறார். இதனைக் கேட்க எவ்வித உரிமையும் அவருக்கு இல்லை.
அதிமுக அரசு லாட்டரி சீட்டை தடை செய்த பிறகு 2006-இல் ஆட்சிக்கு வந்தபோது இவர்கள்(திமுக), லாட்டரி சீட்டு அதிபரோடு அமர்ந்துகொண்டு கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடத்தியவர் தான் இவரும் இவரது, தந்தையும். லாட்டரி தடை பற்றி பேச இவர்களுக்கு எந்தவித அருகதையும் கிடையாது.
ஆன்லைன் லாட்டரி தடை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மூலம், ஆன்லைன் லாட்டரி தடை அரசின் பரிசிலனையில் இருப்பதையும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனை தெரிந்தே, ஏதோ சொல்வது போல ஸ்டாலின் பேசுகிறார்.
இவர், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களூக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்திலும் இதேபோல்தான் செயல்பட்டார் என்று சிவி சண்முகம் விமர்சித்தார்.