7 பேர் விடுதலை; ஆளுநரை சந்தித்து முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து ஆளுநரை சந்தித்து முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து ஆளுநரை சந்தித்து முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2000-ஆம் ஆண்டே உத்தரவிட்டது தி.மு.க. அரசுதான்! உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த ஒரே ஆண்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது. 2011-இல் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டது இதே அ.தி.மு.க. அரசுதான்!
இன்றைக்கு 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்ற நேரத்தில் 7 பேரின் விடுதலையில் அனைத்து குழப்பங்களையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் ஆறு ஆண்டுகளாக இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்துகொண்டிருப்பதும் அ.தி.மு.க. அரசுதான்!
முதலில் 2014 தேர்தலுக்காக - ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்து இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்தது அ.தி.மு.க. அரசு. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி - இரண்டு ஆண்டுகள் அமைதி காத்து விட்டு - இப்போது எங்கள் கழகத் தலைவர் கோரிக்கை வைத்த உடன் பதற்றப்படுகிறார் பழனிசாமி .
தனது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதல்வருக்கு, தி.மு.க. குறித்து குற்றம்சாட்டுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
தயவு செய்து இதிலும் கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், நேராக ஆளுநர் மாளிகைக்குச் செல்லுங்கள். ஆளுநர் அவர்களை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெறுங்கள் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.