சென்னையில் 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம்
சென்னையில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரண்டு நாள்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை தொடரும். அதேவேளையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை முதல் வட தமிழகம் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு நாள்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழகம், மண்டபம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும், எண்ணூர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.