கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி விரதம் தொடக்கம்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விரதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விரதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டம் கம்பத்தில் சுருளி வேலப்பர் கோவில், கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சண்முகநாதர், மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, காமயகவுண்டன்பட்டியில் உள்ள பாட்டையா கோவில் வளாகத்தில் உள்ள முருகன், அணைப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ சண்முகநாதன் மலைக்கோயில், கூடலூரில் உள்ள ஸ்ரீ கூடல் சுந்தரவேலவர், லோயர் கேம்பில் உள்ள வழிவிடும் முருகன் ஆகிய கோயில்களில் கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.
கோயில்களுக்கு வந்து கங்கணம் கட்டிக் கொள்ள வந்த ஆண், பெண் பக்தர்களுக்கு கரோனா தொற்று பரவல் இருப்பதால் கங்கணம் கட்டப்படவில்லை. இதனால் பக்தர்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் கங்கணம் கட்டிக் கொண்டனர்.
மேலும் கோவில்களில் வழிபாடு செய்ய குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி காசி விசுவநாத சுவாமி கோயில் குருக்கள் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ''கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு கங்கணம் கட்டவில்லை, அவர்களாகவே கட்டிக்கொண்டனர்.
கந்தர் சஷ்டியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.