திருவாரூர் மாவட்டத்தில் 249 நிவாரண முகாம்கள்: அமைச்சர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 249 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்தார்.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதிகளில், நிவர் புயலை முன்னிட்டு பாதுக்காப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், வடிகால் வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்படுவதையும் உணவுத்துறை அமைச்சர் இரா . காமராஜ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நிவர் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படக் கூடிய இடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கூத்தாநல்லூர் முகாம்களுக்கு நேரில் சென்ற அமைச்சர் காமராஜ், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உணவுகளை வழங்கினார்.
தொடர்ந்து, நேருஜி சாலையில் நடைபெற்று வரும், வடிகால் வாய்க்கால்களில் செடி, கொடிகளை அகற்றும் பணிகளையும் அமைச்சர் காமராஜ், மழை, வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசு இணைச் செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஸ், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, ஆணையர் ஆர்.லதா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அப்போது, நிருபர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ்,
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில், அனைத்து முன்னேற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில், 212 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது. மேலும், அந்தப் பகுதியில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்காக, மாவட்டம் முழுக்க 249 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவுகளும், அடிப்படைத் தேவைகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கரோனா தொற்று காலம் என்பதால் அதற்கேற்ப அரசு தெரிவிக்கின்ற அறிவுரைகளை கடைபிடிக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வட்டத்திற்கும், துணை ஆட்சியர்கள் நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் களத்தில் நின்று மக்களுக்கான பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்றி வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்தார். ஆயிவின் போது, கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.