சென்னையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி
சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 390 இடங்களில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 390 இடங்களில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.58 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தகவல் தொடர்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.
தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 390 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் சேவை, மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் சேவை வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
வியாழக்கிழமை பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும். மின் விநியோகம் தொடர்பான தகவலுக்கு அவரசர தொடர்பு எண்களை தொடர்புகொண்டு அழைக்கலாம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.