முகப்பு
தமிழ்நாடு

பாசன வாய்க்காலில் நீர் செல்வதில் சிக்கல்: ஆகாயத் தாமரைகளை அகற்றிய விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தடுப்பணையிலிருந்து உத்தமபாளையம் பாசனத்திற்குச் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் தாங்களாகவே ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் விவசாயிகள்
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தடுப்பணையிலிருந்து உத்தமபாளையம் பாசனத்திற்குச் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் தாங்களாகவே ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி நன்செய் பாசனப் பரப்பிற்கு கம்பம் அருகே உள்ள தொட்டம்மன் துறையிலிருந்து அம்மாபட்டி வரை 17 கிலோ மீட்டர் நீளமுள்ள உத்தமுத்து கால்வாய் செல்கிறது. இதன்மூலம் சுமார் 1,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகின்ற நிலையில்,  உத்தமுத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள், முட்செடிகள் நிறைந்து கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நின்றது. இதனால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

இதுபற்றி பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கேஜ் வீல் பொருத்திய நான்கு டிராக்டர்களை கால்வாயில் இறக்கி இருபுறமும் உள்ள செடி கொடிகளை அகற்றினர். கால்வாய் நீரின் மேற்பரப்பில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளையும் அகற்றினர். வியாழக்கிழமை இரண்டாவது நாளாக ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

மேலும் இதுகுறித்து உத்தமபாளையம் பாசன பரவு விவசாய சங்க நிர்வாகி முகமது ராவுத்தர் கூறுகையில், உத்தமுத்து கால்வாயில் வரும் தண்ணீர் பாசனம் நிலங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததே இதற்கு காரணம். விவசாயிகளான நாங்களே சொந்த செலவில் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.