பாலியல் வன்கொடுமைகளின் நிலமாக இந்தியா மாறியுள்ளது: உயர்நீதிமன்றம் கருத்து
புனித பூமியாக இருந்த இந்தியா, தற்போது பாலியல் வன்கொடுமை பூமியாக மாறியுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை: பாலியல் வன்கொடுமைகளின் நிலமாக இந்தியா மாறியுள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மகாராஷ்டிரத்தில் உள்ள சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவர் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து மகராஷ்டிரத்துக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழர்கள் பொதுமுடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக் கட்டுப்பாடு, ஊதியம் வழங்கப்படுவதில்லை . மேலும், புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதனால் பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது துரதிஷ்டவசமானது. குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.