களியக்காவிளையில் 1 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது; மூவர் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் சேமியா மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தக்கலை டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள் விய
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் சேமியா மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தக்கலை டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள் வியாழக்கிழமை காலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த காவலர்கள் தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.
களியக்காவிளை சந்திப்பு அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு மையம் நடத்தி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த அன்வர். இதையொட்டியே அவரது வீடு அமைந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டின் மேல்மாடியில், கேரளத்துக்கு கடத்திச் செல்ல புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அவரது தலைமையில் வந்த காவவர்கள் குறிப்பிட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சேமியா பாக்கெட்டுகளுக்கு இடையே ஒரு டன் அளவிலான புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து புதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து அன்வரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த செயல்பட்டு தப்பியோடிய மூவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.