முகப்பு
தமிழ்நாடு

சூரப்பா மாநிலத்தின் மற்றொரு முதல்வரா? அண்ணா பல்கலை. விவகாரத்தில் ஸ்டாலின் விமரிசனம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணை வேந்தர் சூரப்பா மாநிலத்தின் மற்றொரு முதல்வரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
கோப்புப்படம்
பகிர்:


அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணை வேந்தர் சூரப்பா மாநிலத்தின் மற்றொரு முதல்வரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கை:

''ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும்.  மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும்  முடியும். ஆகவே  உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்'' என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள், தமிழக உயர்கல்வி வளர்ச்சியில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும். 

அ.தி.மு.க. அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து - கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு - அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் - ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்? முதல்வர் பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த “அனுமதி” காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.

இவ்விவகாரத்தில் முக்கியமான முடிவுகளை எடுத்து,  துணைவேந்தர் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கடிதம் எழுதுகிறார் என்றால் - அவர் என்ன மாநிலத்திற்கு இன்னொரு முதல்வர் போல் செயல்படுகிறாரா? 

துணைவேந்தரின் அதிகார அத்துமீறலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை  உடனே “டிஸ்மிஸ்”  செய்ய வேண்டும் என்று வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும். 

மேலும், “துணைவேந்தர் எழுதியுள்ள கடிதத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உரிய அதிகாரபூர்வமான உத்தரவாதம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் பிரதமருக்கு உடனடியாகக் கடிதம் எழுதி - தனது எதிர்ப்பை முதல்வர் பழனிசாமி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும்; “உயர்சிறப்பு அந்தஸ்து”க்கு வழிவிடும் துணைவேந்தர் கடிதத்திற்குத் துணைபோகும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட முன்வடிவைத் தமிழக ஆளுநர் அவர்கள் நிராகரித்திட வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.