முகப்பு
தமிழ்நாடு

குட்கா விவகாரம்: நோட்டீஸ் மீதான இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
குட்கா விவகாரம்: நோட்டீஸ் மீதான இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
பகிர்:

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. 

இதன் பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும்,  சட்டப்பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண்,  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அடிப்படை தவறுகள் சரிசெய்யப்பட்டு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வாதிட்டார். 

அப்போது பேரவை உரிமை மீறல்குழு தரப்பில் ஆஜரான  அரசு சிறப்பு மூத்த வழக்குரைஞர் சோமையாஜி,  உரிமை மீறல் பிரச்னை என்பது சட்டப்பேரவை அதிகாரத்துக்கு உள்பட்டது. உரிமை மீறல் குழு நோட்டீஸுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும், பின்னர் குழு ஆராய்ந்து சட்டமன்றத்துக்கு தனது முடிவை அறிவிக்கும். எனவே முகாந்திரம் இல்லாமல் விதிக்கபட்ட தடையை நிறுத்திவைக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இரண்டாவது நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டனர். மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  ஒத்திவைத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →