முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து மனு

முதல்வர் ஜெயலலிதாவின் வரி பாக்கியான 36.9 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து ஆம் அத்மி கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
ஜெயலலிதாவின் வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து மனு
பகிர்:

சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி பாக்கியான 36.9 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து ஆம் அத்மி கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம் அத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். 

இதனையடுத்து, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி கடந்த  ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் வருமான மற்றும் சொத்து வரி நிலுவைத் தொகை உள்பட ரூ.69 கோடியை வைப்பு தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு  செலுத்தியது. இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியான ரூ. 36.9 கோடியை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ஜெயலலிதாவுக்காக ரூ.50.80 கோடி  செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு மக்கள் வரி பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறானது என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வேதா நிலையம் அரசுடைமையாக்கப்படுவதை எதிர்த்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில், இந்த வழக்கையும் விசாரிக்க மனுதாரர் முறையிட  வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.