மதுரை: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பங்களை ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகள் பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல், கீழ்நிலை பணியாளர்கள் வரை வழங்கப்பட்டதே முறைகேட்டிற்கு முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளது.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட இத் திட்டம், பின்னர் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட விவசாய நிலத்துக்கான ஆவணம், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், வங்கிக் கணக்கு ஆகியன இருந்தால் இத் திட்டத்தில் பயனாளிகளாகச் சேர முடியும். ஆரம்பத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் வேளாண் துறையினரிடம் விண்ணப்பித்து, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். வருவாய், வேளாண் அலுவலர்கள் மூலமாக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும்போது, கால தாமதம் ஏற்பட்டதையடுத்து விவசாயிகளே நேரடியாக இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. கடந்த ஏப்ரலுக்கு பிறகு இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இவ்வாறு பதிவு செய்த விண்ணப்பங்கள் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் மற்றும் பயனாளிகள் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்ததையடுத்து மேற்கொண்ட ஆய்வில் லட்சக்கணக்கானோர் தகுதியற்ற பயனாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்தவர்களின் பெயர், விவரங்களை ஆய்வு செய்தபோது, பல வகைகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்கள் அதாவது தாய், தந்தை, மகன் என மூவர் பெயரிலும் உதவித் தொகை பெற்றுள்ளனர். மூவருக்கும் ஒரே நில ஆவணத்தைச் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பிக்கும் விவசாயிகள் கண்டிப்பாக செல்லிடப்பேசி எண் இணைத்திருக்க வேண்டும். ஆனால், பலரும் செல்லிடப்பேசி எண் குறிப்பிடவில்லை. அவ்வாறு எண் அளித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் சொந்த மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வெளி மாவட்டம், வெளிமாநிலங்களுக்குச் சென்றவர்களாக இருக்கின்றனர்.
என்னதான் தவறான தகவல்களை அளித்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திருந்தாலும், அதை வேளாண் அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே பயனாளிகளாகத் தேர்வாக முடியும். இணையவழி ஒப்புதல் அளிப்பதற்காக மாவட்டத்துக்கு ஒரு கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது.
உதவித் தொகை விண்ணப்பத்தை வேளாண் அலுவலர் பரிந்துரை செய்த பிறகு உதவி இயக்குநர் ஒப்புதல் வழங்கும் நடைமுறை உள்ளது. உதவி இயக்குநர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த கடவுச் சொல், வட்டார அளவில் வேளாண் திட்டங்களுக்காகப் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் மட்டுமின்றி இணைய சேவை மையங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வேளாண் அதிகாரிகள் சார்பில் தொகுப்பூதிய பணியாளர்கள், தனியார் இணைய சேவை மையத்தினர் ஒப்புதல் வழங்கும் பணியைச் செய்திருக்கின்றனர்.
இங்கு தான் தகுதியற்ற பயனாளிகள் பலர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். பல இடங்களில் தொகுப்பூதிய பணியாளர்கள், இணைய சேவை மைய ஊழியர்களின் உறவினர்கள் பெயரில் உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தந்த மாவட்ட அளவில் பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல், வேறு மாவட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, மதுரையைச் சேர்ந்த விண்ணப்பதாரருக்கு, திருவண்ணாமலையில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தவறாக உதவித் தொகை பெற விரும்பியவர்கள், உதவித் தொகை பெற்றுக் கொடுத்து ஆதாயம் பெற விரும்பிய இடைத்தரகர்கள், ஒரு சில வேளாண் அலுவலர்கள், இணைய சேவை மைய பணியாளர்கள் என கூட்டுச் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கொடுத்த பிறகு அதில் இணைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களைச் சரிபார்க்க முடியாது. ஒப்புதல் வழங்குவதற்கான கடவுச்சொல்லை கீழ்நிலை பணியாளர்கள் வரை பரவலாக்கம் செய்தது மோசடிக்கு வழிவகுத்துள்ளது.
இப்போது வழங்கப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியலில் பெயர், ஊர் மட்டுமே வேளாண் அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பட்டியலில் இருப்பவர்கள் தகுதியானவர்களா என ஊர் ஊராகச் சென்று தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தகுதியற்ற பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடவுச்சொல்லைத் திருடி ஒப்புதல் அளித்திருப்பதாக தற்போது அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியே நடந்திருந்தாலும், ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகள் விவரத்தை சரிபார்க்கும் வசதி இருந்திருந்தால் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நிலை
ஏற்பட்டிருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.