முகப்பு
தமிழ்நாடு

தேசியக் கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்ததை ஏற்பதாக காவல்துறை தகவல்

தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக முன்ஜாமீன் கோரிய வழக்கில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து  எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
தேசியக் கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்ததை ஏற்பதாக காவல்துறை தகவல்
பகிர்:

சென்னை: தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக முன்ஜாமீன் கோரிய வழக்கில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து  எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து விசாரணையை வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை  களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இணையதள பதிவு ஒன்றில், நடிகர் எஸ்.வி.சேகர், தேசியக் கொடி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக  நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர்  தேசியக் கொடியை அவமதித்து, தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ்  எஸ்.வி.சேகர் மீது  மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து வழக்கை செப்டம்பர் 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம் அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை வரும் செப்டம்பர் 14 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →