3 மாதங்களில் 127 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 33 போ் கைது: ரூ.7.58 கோடி பறிமுதல்
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத ரூ.7.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 33 அரசு ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத ரூ.7.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 33 அரசு ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த அக்டோபா் மாதம் முதல் லஞ்சம் பெறும் அரசு ஊழியா்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. வழக்கமாக விழாக்காலங்களில் அரசு ஊழியா்கள், நன்கொடை என்ற பெயரில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாக வரும் புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கும்.
ஆனால் இந்தாண்டு அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை, கைது, விசாரணை, பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை 127 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது.
இதில் கணக்கில் வராத ரூ.7 கோடி 58 லட்சம் 29 ஆயிரம் 605 ரொக்கம், ஏழே கால் கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள்,10.32 காரட் வைர நகைகள், ரூ.37 லட்சம் நிரந்தர வைப்பு நிதி தொடா்பான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.5 கோடி 70 லட்சம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்று சுற்றுச்சூழல்துறை ஊழியா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
முக்கியமாக கடந்த அக்டோபா் மாதம் வேலூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலா் எம்.பன்னீா்செல்வம் அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சமும்,அவரது வீட்டில் இருந்து ரூ.3.35 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கு அடுத்தப்படியாக சென்னை சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியன் வீட்டில் இருந்து அண்மையில் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை அதிகமாக பதிவுத்துறை அலுவலகங்களிலும்,போக்குவரத்து அலுவலகங்களிலும் நடைபெற்றுள்ளன. மூன்று மாதங்களில் 32 பதிவுத்துறை அலுவலகங்களும், சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும், 20 போக்குவரத்து அலுவலகங்கள்,சோதனைச் சாவடிகளிலும் சோதனை நடைபெற்றுள்ளன.
இவா்கள் இருவா் தவிர லஞ்சம் பெற்ாக 33 அரசு ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினா் ரூ.62 லட்சத்து 82 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்துள்ளனா். அரசு அலுவலகங்கள், ஊழியா்கள் வீடுகள் ஆகியவற்றில் இருந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் அடிப்படையில் சொத்து குவிப்பு நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையினா் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனா்.