கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவி மரணம்
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 4-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 4-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே தண்ணீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், மனைவி துர்கா. இவர்கள் இருவரும் நாள்தோறும் கீரை மற்றும் காய்கறிகளை கிராமப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களது மகள் அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் துர்கா தனது மகள் கோபிகாவை(8) அழைத்துக் கொண்டு கிருஷ்ணா கால்வாயில் துணி துவைக்கச் சென்றுள்ளார்.
அங்கு துர்கா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, எதிரே விளையாடிக் கொண்டிருந்த கோபிகா கால்வாயில் இறங்கிய நிலையில் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்வதைப் பார்த்த துர்கா சத்தம்போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் குழந்தை கோபிகாவை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கும், கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து புதன்கிழமை காலையில் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்ற தண்ணீரை நிறுத்திவிட்டு மீண்டும் தேடினர். அப்போது சிறுகடல் என்கிற இடத்தில் குழந்தை சடலமாக மிதந்து கொண்டிருந்தாள். உடனே அந்த சிறுமியின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.