தமிழ்நாடு

தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்கள் நியமனம் : உயர்நீதிமன்றம் கருத்து

DIN

சென்னை: தீர்ப்பாயங்களில் நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், நிபுணர்களாக இருக்க வேண்டும் என 
உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது. 

தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்ட பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு போதுமான  நிபுணத்துவம் இல்லை என்பதால் தான் மத்திய அரசு தீர்ப்பாயங்களை உருவாக்கியது. ஆனால் பல்வேறு துறைகளல்  நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் நிபுணராக இருக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 20 ஆண்டு கால நிர்வாக அனுபவத்தில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் தான் என குறிப்பிட்டார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு  ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT