மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் வரும் 4 நாள்களுக்கு (ஏப்.18 முதல் ஏப்.21 வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் வரும் 4 நாள்களுக்கு (ஏப்.18 முதல் ஏப்.21 வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:-
மகாராஷ்டிர மாநிலம் விதா்பா முதல் உள்தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களின் சில இடங்களில் வரும் 4 நாள்களுக்கு(ஏப்.18 முதல் ஏப்.21 வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
வெப்பநிலை அதிகரிக்கும்: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சிராப்பள்ளி, கரூா் ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 20,21 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 60 மி.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், பென்னாகரத்தில் தலா 50 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, விருதுநகா் மாவட்டம் சாத்தூா், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தலா 40 மி.மீ., இரணியல், திருச்சுழியில் தலா 30 மி.மீ., அருப்புக்கோட்டை, பேரூா், எடப்பாடி, ஈரோடு, திருபுவனம், சிற்றாா், கோவிலான்குளம், வத்திராயிருப்பு, ராதாபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.