தமிழ்நாடு

வனத்துறையைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

DIN

பவானி: பவானி அருகே மர்ம விலங்குகள் கிராமத்தில் நடமாடி வருவதாகத் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வனத்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானியை அடுத்த ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையம் கிராமத்தில் கடந்த 9 ஆம் தேதி கன்னையனுக்குச் சொந்தமான ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த நாய்கள் 7 ஆடுகளைக் கடித்துக் கொன்றன. மேலும், 4 ஆடுகளைக் கடித்துக் காயப்படுத்தின. தொடர்ந்து, அருகாமையில் உள்ள மற்றொரு கிராமமான துருசாம்பாளையத்தில் பூர்ணத்துக்குச் சொந்தமான பட்டிக்குள் புகுந்த நாய்கள் 12 செம்மறி ஆடுகள் கடித்துக் கொன்றன.

இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வனத்துறையினர் நாய்கள் கடித்ததால் ஆடுகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துச் சென்றனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இரவில் ஆடுகளைக் குறி வைத்துக் கடிக்கும் நாய்களைப் பிடிக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மர்ம விலங்களின் நடமாட்டத்தைக் கண்ட இளைஞர், நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த நல்லிபாளையம், துருசாம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பவானி - அந்தியூர் சாலையில் நல்லிபாளையம் பிரிவு அருகே சனிக்கிழமை அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீஸார் மற்றும் அந்தியூர் வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, மர்ம விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT