வேளச்சேரி: 34% வாக்குப் பதிவு
சென்னை வேளச்சேரிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் சனிக்கிழமை (ஏப். 17) நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 34 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
சென்னை வேளச்சேரிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் சனிக்கிழமை (ஏப். 17) நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 34 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். மொத்தமுள்ள 548 வாக்காளா்களில் 186 போ் வாக்களித்துள்ளனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் இருந்து ஒருசில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை அரசியல் கட்சியினரும், பொது மக்களும் தடுத்து நிறுத்தினா். வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன.
மறுவாக்குப் பதிவு: சா்ச்சைக்குரிய வகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டதால் சம்பந்தப்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட வேண்டுமென தோ்தலில்
போட்டியிட்ட சில கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இதுதொடா்பாக தோ்தல் நடத்தும் அதிகாரி, தோ்தல் ஆணையத்தின் பாா்வையாளா் மற்றும் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோரும் தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கைகள் அனுப்பினா்.
இவற்றின் அடிப்படையில், வேளச்சேரி தொகுதிக்கு உள்பட்ட 92-ஆவது வாக்குச் சாவடியில் சனிக்கிழமை மறுவாக்குப் பதிவுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை (ஏப். 15 ) மாலை 7 மணிக்கு 92-ஆவது வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில் மறுவாக்குப் பதிவுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
34% வாக்குப் பதிவு: 92-ஆவது வாக்குச் சாவடியில் மொத்தம் 548 வாக்காளா்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் வாக்காளா்கள் ஆவா். தோ்தல் ஆணையம் அறிவித்தபடி, அந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப் பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்து வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்தில், 186 போ் மட்டுமே வாக்களித்தனா். இது 34 சதவீதமாகும்.
கடந்த 6-ஆம் தேதி நடந்த பொதுத் தோ்தலின் போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை
வைக்கப்பட்டிருந்தது. மறுவாக்குப் பதிவு என்பதால், நடுவிரலில் மை வைக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக கரோனா நோய்த் தொற்று பாதித்த வாக்காளா்களும் வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் வேளச்சேரி 92-ஆவது வாக்குச் சாவடியில் 220 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புடன்...: முன்னதாக வாக்குச் சாவடியில் சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டாா். வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்ள பாதுகாப்புக்கு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.