குடிநீர் வசதி கேட்டு திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் அருகே குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கீழானூர் ஊராட்சியில் குடிநீர் உவர்ப்பு நீராக உள்ளதால் பயன்படுத்த முடியாத உள்ளதால், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு தடவை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சி தலைவர் தலைமையில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவலறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் துரைபாண்டியன், நகர் காவல் நிலைய போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கிராம ஊராட்சியைச் சேர்ந்தவர்களை ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழானூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் உஷாபிரேம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது.
திருவள்ளூர் அருகே கீழானூர் ஊராட்சிக்கு உள்பட்டது சிட்டத்தூர், கீழானூர், நசரேத் ஆகிய கிராமங்கள். இக்கிராமத்தில் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் குடிநீர் உவர்ப்பு நீராக இருப்பதால் குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. அதேபோல், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கு கூட அடிப்படை வசதிகளான போக்குவரத்து மற்றும் தெருவிளக்கு வசதியும் கிடையாது.
மேலும், இந்தக் கிராம மயானத்திற்கு சாலை வசதி மற்றும் சுற்றுச்சுவர் வசதியும் கிடையாது. இந்த வசதிகளை செய்து தரக்கோரி கடந்த 20 ஆண்டுகளாகக் கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளோம். ஆனால், இதுவரையில் எவ்விதமான வசதி செய்து கொடுக்கவும் இல்லை.
இதனால் நல்ல தண்ணீருக்காக 2 கி.மீ தொலைவில் உள்ள மோட்டார் பம்ப்செட்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கும் விவசாய கிணறுகள் வைத்துள்ளோர் பொதுமக்கள் தண்ணீர் எடுக்க வருவதை பார்த்ததும் மோட்டாரை நிறுத்தி விடுகின்றனர். ஏரியில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறு குழாய்களில் வழியும் நீரை பிடித்து பயன்படுத்தி வருகிறோம்.
அதேபோல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கூலியும் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே இதுபோன்ற எங்கள் நிலையைக் கருத்திற்கொண்டு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளிக்க காவல்துறையினர் முக்கிய நிர்வாகிகளை அழைத்துச் சென்றனர் அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.