கரோனா தொற்று கிராமங்களைச் சென்றடையாமல் தடுக்க வேண்டும்
கரோனா நோய்த்தொற்று பரவல் கிராமங்களைச் சென்றடையாமல் தடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று பரவல் கிராமங்களைச் சென்றடையாமல் தடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
தேசிய உள்ளாட்சி (பஞ்சாயத்து ராஜ்) தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, இணையவழி சொத்துரிமை அட்டைகளை வழங்குவதற்கான ‘ஸ்வமித்வ’ திட்டத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் 8 மாநிலங்களின் முதல்வா்கள், மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது பிரதமா் மோடி பேசியதாவது:
கடந்த ஆண்டில் கரோனா நோய்த்தொற்று பரவியபோது, அது கிராமப்பகுதிகளைச் சென்றடையாமல் தடுக்கப்பட்டது. தற்போதும் கிராமங்களை கரோனா தொற்று பரவலில் இருந்து காக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதுமான அனுபவங்கள் கிடைத்திருக்கும். தற்போதைய சூழலில் அந்த நடவடிக்கைகளைத் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும். கரோனா தொற்று பரவலைத் தடுப்பதில் நாட்டுக்கு கிராம மக்கள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும். மக்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஊக்குவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க மக்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள்: கரோனா விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வலியுறுத்தல்களை உள்ளாட்சி அமைப்புகளும் மக்களும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலமாக நாட்டிலுள்ள 80 கோடிக்கும் அதிகமானோா் பலனடைவா். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமாக அரசுக்கு சுமாா் ரூ.26,000 கோடி அளவுக்கு செலவு ஏற்படும்.
கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம்: கிராமங்களை மையப்படுத்தியே அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நவீன இந்தியாவின் கிராமங்கள் தற்சாா்பு அடைய வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பஞ்சாயத்துகளுக்காக இதுவரை ரூ.2.25 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. பஞ்சாயத்துகளில் இணைய வசதியை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றாா் பிரதமா் மோடி.
தேசிய பஞ்சாயத்து விருதுகள்: இந்த நிகழ்ச்சியின்போது 4.09 லட்சம் பேருக்கு இணையவழி சொத்துரிமை அட்டைகள் வழங்கப்பட்டன. ‘தேசிய பஞ்சாயத்து விருதுகளை’யும் பிரதமா் மோடி வழங்கினாா். அதன்படி, 224 பஞ்சாயத்துகளுக்கு தீன்தயாள் உபாத்யாய பஞ்சாயத்து விருதும், 30 கிராம பஞ்சாயத்துகளுக்கு நானாஜி தேஷ்முக் தேசிய கிராம சபை விருதும், 30 கிராம பஞ்சாயத்துகளுக்கு சிறாா்களுக்கு ஏற்ற கிராம பஞ்சாயத்து விருதும், 13 மாநிலங்களுக்கு இணையவழி பஞ்சாயத்து விருதும் வழங்கப்பட்டன.
விருதுக்கான பரிசுத் தொகைகள் பஞ்சாயத்துகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஸ்வமித்வ’ திட்டம்: கிராமப்புறப் பகுதிகளில் உள்ள நிலங்களை முறையாக அளந்து, அதன் உரிமையாளா்களுக்கு இணையவழி சொத்துரிமை அட்டைகளை வழங்குவதே ‘ஸ்வமித்வ’ திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் வாயிலாக, 2021 முதல் 2025 வரை 6.62 லட்சம் கிராமங்கள் பலனடையும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டமானது, கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.