தமிழ்நாடு

திருப்பூரில் 7 மாதங்களுக்குப் பிறகு பொதுமுடக்கம்: சாலைகள் வெறிச்சோடின

DIN

திருப்பூர்: திருப்பூரில் 7 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை மாநகரின் முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது. அதேவேளையில் ரயில்கள், அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெறிச்சோடி காணப்பட்ட வளர்மதி நொய்யல் பாலம்

இதைத் தொடர்ந்து நோய்த்தொற்று குறையத் தொடங்கியதால் செப்டம்பர் மாதம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் கரோனாவின் 2 ஆவது அலை வேகமாகப் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருப்பூர் மாநகரில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரையில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் வாகனச்
சோதனையில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்.

மேலும், பொதுமுடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துறையும் அறிவித்திருந்தது. மாநகரின் முக்கிய இடங்களில் 450 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளான குமரன் சாலை, காமராஜர் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடியது.

  திருப்பூர் அம்மா உணவகத்தில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.  

அதேநேரத்தில் மாநகரில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் வழக்கம்போல் செயல்பட்டன. இதில், பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அதேபோல அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கியதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது.

திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், மங்கலம் சாலை, ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், வீரபாண்டி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT