திருப்பூர் ரயில் நிலையத்தில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்
கரோனா அச்சம் காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் திருப்பூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை குவியத் தொடங்கினர்.
கரோனா அச்சம் காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் திருப்பூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை குவியத் தொடங்கினர்.
கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொது முடக்கத்தையும் அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வரும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக சொந்த ஊர் திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, பிகார், மேற்கு வங்கம், ஒடிஸா, அஸ்ஸாம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வதற்காக திருப்பூர் ரயில் நிலையத்துக்குத் தொழிலாளர்கள் அதிக அளவில் திங்கள்கிழமை வரத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக டிக்கெட் கவுண்டர்களில் வழக்கத்தைவிடக் கூட்டம் பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் ஹோட்டல்களில் இருந்து பார்சல்களை வாங்கி வந்து நடைமேடைகளில் சாப்பிட்டு ரயில்களுக்காகக் காத்திருக்கின்றனர்.