வாக்கு எண்ணிக்கைக்குத் தடையா? - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்கு எண்ணும் மையங்களில் உரிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் உரிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத் தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
கரூரில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே, வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும். மருத்துவக் குழுவை பணியமர்த்த வேண்டும். கிருமிநாசினி வைக்க வேண்டும், முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், 4900 சதுர அடி மற்றும் 3 ஆயிரத்து 400 சதுர அடிகளில் இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 2 சுயேட்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முகவர்களை உள்ளே அனுமதிக்கப் போவதில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக 6 கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளதாக தெவிக்கப்பட்டது.
இந்த நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் வாக்கு எண்ணிக்கையின்போது தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்தது. கரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர், பொது சுகாதார இயக்குனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அன்றையதினம் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.