முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி: கட்டுப்பாடுகளை மீறி காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பக்தர்கள் புனித நீராடினர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
எடப்பாடி: கட்டுப்பாடுகளை மீறி காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்
பகிர்:

எடப்பாடி:  எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பக்தர்கள் புனித நீராடினர். 

தற்போது கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையில், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில்  உள்ள காவிரி கரைப் பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடவும், காவிரி ஆற்றில் புனித நீராடவும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. 

இதனையடுத்து பூலாம்பட்டி படகுத்துறை, படித்துறை, விசைப்படகு நிலையம், கைலாசநாதர் ஆலயம், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அங்கு வரும் பக்தர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். 

மேலும் பூலாம்பட்டி பரிசல் துறை, பேருந்து நிலையம், சந்தை திடல், நீர் உந்து நிலையம்  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் காவிரியில் இறங்கி குளிக்காதவகையில் காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் அப்பகுதிக்கு வரும் பக்தர்களுக்கு நோய்த்தொற்று குறித்த எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஆடிப்பெருக்கு விழா புனித நீராட பூலாம்பட்டி பகுதிக்கு வந்த திரளான பக்தர்கள், பூலாம்பட்டி பகுதியில் உள்ள கூட கல், குப்பனூர், மோளப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். மேலும் அவர்கள் காவிரி பகுதியில் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

கரோனோ நோய் தொற்று பரவும் அபாய கரமான சூழலில், புனித நீராடிய பக்தர்களிடம் அது குறித்து கேட்டபோது: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி புனித நீராடும் நிகழ்வு இப்பகுதி மக்களிடையே பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற பாரம்பரிய ஆன்மிக நிகழ்வுகள் கடைப்பிடிக்கபடாத நிலையில்தான் கரோனா போன்ற பெருந்தொற்றுக்களின் பாதிப்பு ஏற்படுவதாகவும்,  இவ்வாறு ஆடிப்பெருக்கு விழாவில் புனித நீராடுவோர் அதன் மூலம் தங்களுக்கு ஆண்டு முழுவதும் நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினர்.  

மேலும் புனித நீராடிய பெண்கள் காவிரிக்கரையில் புதிய தாலிக் கயிற்றுடன், மஞ்சள், குங்குமம்  வைத்து வழிபாடு செய்து பின்னர் அதனை அணிந்து சென்றனர். மேலும் காவிரிக்கரையிலிருந்து பக்தர்கள் குடங்களில் புனித நீரை சேகரித்து வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பூலாம்பட்டி பகுதிகள் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பு இருந்தபோதும் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில்  பக்தர்கள் புனித நீராடும் நிகழ்வு நோய் தொற்று பரவும் அபாயத்தினை ஏற்படுத்திவிடும் வகையில் அமைந்திருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →