தமிழ்நாடு

ஆடி கடைசி வெள்ளி: மடப்புரம், தாயமங்கலம் கோயில்கள் மூடல்; பக்தர்கள் வெளியே நின்று தரிசனம்

DIN

மானாமதுரை: ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயில், இளையான்குடி அருகே தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்கள் அரசு உத்தரவின்படி மூடப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். அதிலும் ஆடி வெள்ளி என்பது பெண் தெய்வங்களுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அரசு விதிமுறைகளின்படி கோயிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோயிலில் காளியம்மனுக்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது.

கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் அவர்கள் வெளியில் நின்று மாவிளக்கு பூஜை நடத்தியும் நெய் விளக்கேற்றியும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்து விட்டு திரும்பினர். கோயில் வளாக பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

தாயமங்கலம் கோயில்

இளையான்குடி வட்டம் தாயமங்கலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரசித்தம் பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தி அம்மன் சந்தனக்கப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் கோயிலுக்கு வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற தகவல் முன்கூட்டியே தெரிந்ததால் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கிராமப்புறங்களில் உள்ள பெண் தெய்வக் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றும் வைபவம், திருவிளக்கு பூஜை வழிபாடு போன்றவை சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT