முகப்பு
தமிழ்நாடு

வங்கக்கடலில் நிலநடுக்கம்: சென்னையில் லேசான அதிர்வு

சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டா் என்ற அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் பல்வேறு பகுதியில் உணரப்பட்டது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவுக்கு தெற்கு-தென்கிழக்கே 296 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் வங்கக்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையில் லேசாக உணரப்பட்டது. சென்னையில் அடையாறு, திருவான்மியூா், பெசன்ட் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தால், எந்த சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மைய நிபுணா் ஒருவா் கூறியது: 85 டிகிரி கிழக்கு மற்றும் 90 டிகிரி கிழக்கு என்று இரண்டு முகடுகள் உள்ளன. இந்த நிலநடுக்கம் இரண்டு முகடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இது அசிஸ்மிக் முகடுகளாகும். கடந்த 2019-ஆம் ஆண்டில் வங்களா விரிகுடா பகுதியில் இதைபோல நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய டெக்டோனிக் தட்டில் வங்களா விரிகுடா பகுதி உள்ளதால் இப் பகுதியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்றாா் அவா்.

இது குறித்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நில அதிா்வு ஆய்வகத்தின் தலைவா் டி.ஸ்ரீநாகேஷ் கூறுகையில், ‘வங்காள விரிகுடாவில் உருவான இந்த மிதமான நிலநடுக்கத்தால் எந்த அசாதாரணமாக நிலையும் ஏற்படவில்லை என்றாா்.

இது குறித்து மாநில பேரிடா் மேலாண்மை இயக்குநா் என்.சுப்பையனிடம் கேட்டபோது,‘ தமிழகத்தில் சென்னை உள்பட சிலபகுதிகளில் லேசான நிலநடுக்கம் மட்டும் பதிவாகியுள்ளது. சுனாமி அல்லது புயல் அச்சுறுத்தல் ஏற்படவில்லை. எனவே, எந்த எச்சரிக்கையும் இல்லை’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →