முகப்பு
தமிழ்நாடு

திமுக அரசின் 100 நாள்: மனம் திறக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் (நேர்காணல்)

திமுக அரசு 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில் கரோனாவைக் கையாண்டது, பெட்ரோல் விலை குறைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

திமுக அரசு 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில் கரோனாவைக் கையாண்டது, நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கை, பெட்ரோல் விலை குறைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியது:

“ஊழல் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதி. இது அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல.

பொதுவாக அரசின் முதல் மூன்று மாதங்கள் அல்லது 100 நாள்களை தேன்நிலவு காலம் என்று கருதுவார்கள். ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது அப்படி அல்ல. அப்போதைய சூழல் பெரும் நெருக்கடியில் இருந்தது, கரோனா பாதிப்பின் தாக்கம் கடுமையாக இருந்தது.

முந்தைய அதிமுக அரசின் நிர்வாக முறைகேடுகளாலும், ஊழல் மனப்பான்மையாலும் நிதிநிலை மோசமான நிலையிலிருந்தது.    

நாங்கள் பொறுப்பேற்றவுடனே, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினோம். மக்கள் நலன் கருதி கரோனா நிவாரணத் தொகை, இலவச உணவு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு என வாக்குறுதிகள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட்டன. மக்களின் அத்தியாவசியத் தேவைகள் உடனியாக வழங்கப்பட்டன.

நான் பேரவையில் கூறியதைப்போல, எங்களது வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று ஏமாற்றப்போவதில்லை. ஆனால், தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த அரசு படிப்படியாக நிறைவேற்ற உறுதியுடன் செயல்படும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

கரோனாவைக் கையாண்ட தருணங்கள்

முந்தைய அதிமுக அரசு கரோனா முதல் அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறியது. இரண்டாம் அலையின் தாக்கம் குறித்தும் அந்த அரசு கவலை கொள்ளவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கரோனா பெருந்தொற்று ஒருநாளைக்கு 30,000 புதிய பாதிப்புகளைத் தொடும் அளவுக்கு பரவி வந்தது. நிலைமை அபாயகரமான நிலையிலிருந்தது. இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தில் இருந்தது.

தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதையும், பலி எண்ணிக்கையைக் குறைப்பதையும் முதல் பணியாக எடுத்துக்கொண்டு பொறுப்பேற்பதற்கு முன்பே அதற்கானப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினோம்.

தேர்தல் முடிவுகள் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அதிகாரிகளுடன் நான் ஆலோசனைகள் நடத்தினேன்.

எனினும் அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து 24 மணி நேரமும் எவ்வித இடைவேளையின்றி முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டோம். அந்த நிலைமை மிகவும் மோசமானது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் உருளைகள் கையிருப்பில் இல்லாததால் மருத்துவமனை வாசல்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது.

நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் பதற்றத்தில் இருந்தனர். நிலைமை மிகவும் கடினமாக இருந்தது. எங்களுக்கும் நிலைமையைக் கையாள்வதில் அச்சம் இருந்தது.

அது மிகவும் கடினமான நேரம். இது எதிர்கொள்ளவே முடியாத கடினமான காலம் கிடையாது என்ற நம்பிக்கையில் செயல்பட்டோம். ஒருவாரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  

அதிகாரிகள், மருத்துவத் துறை மற்றும் அமைச்சர்களின் ஒத்துழைப்பாலும் கூட்டு முயற்சியாலும்தான் இது சாத்தியமானது.

அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். முதல் நாளிலிருந்து எங்களிடம் தெளிவான திட்டங்கள் இருந்தன, அவற்றைச் சரியாக செயல்படுத்தினோம். இறுதியில் இது கூட்டு முயற்சியின் வெற்றி.

மக்கள் இயக்கம் திமுக

திமுக ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதுமே மக்களுக்காகப் பணியாற்றிக்கூடிய இயக்கம்.

10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதபோதிலும், முந்தைய திமுக அரசால் வகுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வலிமையான அடித்தளங்கள்தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு காப்பாற்றியிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டோம். பேரிடரின்போது ‘ஒன்றிணைவோம் வா’ மூலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

முந்தைய அரசில் நிர்வாகத் திறன் இல்லாததால், மக்கள் மனதில் திமுகதான் ஆளுங்கட்சி என்றிருந்தது. தற்போது திமுகதான் ஆளுங்கட்சி.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், அனைத்து மக்களுக்குமான வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் முறையாக கருத்து கேட்கப்பட்டு முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவோம்.

ரூ. 5 லட்சம் கோடி கடனுக்கான காரணம்

திமுக ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது பொருளாதார அமைப்பில் திருத்தம் மேற்கொள்வதும், நிதி வளங்களை அதிகரிப்பதும் வழக்கமானது. அதிமுக ஆட்சிக்கு வரும்போது பல்வேறு காரணங்களுக்காக இது நடப்பதில்லை.

கடந்த 10 ஆண்டுகால, குறிப்பாக கடந்த 7 ஆண்டுகால மோசமான ஊழல் நிர்வாகத்தின் விளைவுதான் ரூ. 5 லட்சம் கோடி கடன்.

நிதி நிலைமையை முன்னேற்ற எங்களது அரசு கடுமையாக உழைத்து வருகிறது. இதை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சரி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கியும் செயல்பட்டு வருகிறோம். எந்தவொரு நெடிய பயணமும், முதல் படியிலிருந்துதான் தொடங்கும். எங்களுடைய முதல் படியை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எடுத்துள்ளோம்.

திமுக 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியிலிருந்தால், அந்த இலக்கை அடையும் பாதையில் தமிழ்நாடு இருக்கும். மக்கள் எங்களுக்கு அந்த வாய்ப்பை நிச்சயம் அளிப்பார்கள்.

பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை உயர்வு மக்களை அனைத்து விதத்திலும் பாதிக்கும் என்பதையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளைப் பாதிக்கும் என்பதையும் உணர்ந்து பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மாநில அரசு பெட்ரோல் விலையை ரூ. 3 குறைத்துள்ளது.

நாட்டிலேயே பெட்ரோல் விலையைக் குறைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட பிறகு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிக்கிறார்.

வர்த்தகத்தையும், உற்பத்தியையும், பணி நேரத்தையும் அதிகரிக்கும் என்பதாலும், பொருளாதார சூழலில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என்பதாலும் இந்த விலைகுறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தையும் தாண்டி, பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பது மக்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். சாதாரண மனிதருக்கு இது மிகப் பெரிய விஷயம். பெட்ரோல் விலையைக் குறைத்து சாதாரண மனிதனுக்கு உதவ வேண்டும் என்றே நாங்கள் செயல்பட்டோம்.

நீட் நிலைப்பாடு

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்க நீட் தேர்வை அனுமதிக்கக் கூடாது என்பதில் திமுக ஒரு அரசியல் கட்சியாக உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மருத்துவப் படிப்புக்கு அனுமதி கிடைக்காததால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது உங்களுக்குத் தெரியும்.

இந்த விஷயத்தில் திமுக மட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அவர் மறைந்தபிறகு, அதிமுக அரசு தங்களது அரசைப் பாதுகாக்க தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக தில்லிக்கு கீழ்படிந்து தெரிந்தே நீட் தேர்வை அனுமதித்தது.

சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அதை மக்களிடம் வெளிக்கொண்டு வராமல் ரகசியமாகவே காக்கப்பட்டது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் இதுதான் முக்கியக் காரணம்.

எங்களை விமரிசிக்க அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. தமிழ்நாட்டில் நீட்டை சட்டரீதியாக அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் திமுக அரசு கமிட்டி அமைத்துள்ளது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின்பேரில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முந்தைய அதிமுக அரசால் செல்போன் வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட பொய் வாக்குறுதிகளைப்போல் அல்லாமல் தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் எங்களது அரசு நிறைவேற்றும்.

தந்தை இல்லாமல் திமுக

எனது தந்தை இல்லாததை எண்ணி உண்மையில் வருந்துகிறேன். நான் எப்படி அவரை இழந்து நிற்கிறேனோ, அப்படித்தான் கட்சித் தொண்டர்கள் உடன்பிறப்புகள் அனைவரும் இழந்து நிற்கின்றனர்.

திமுகவின் இந்த வெற்றியைப் பார்க்கவும், தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்திருப்பதைப் பார்க்கவும் அவர் இல்லாதது மிகுந்த வலியைத் தருகிறது.

உயிருடன் இல்லாதபோதிலும் அவர் கற்றுத்தந்த அரசியலும், அவர் வழிநடத்திய கொள்கைப் பாதையும், அவரது அயராத உழைப்பும் என்னையும் திமுகவையும் வழிநடத்தும்   

அதனால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 பேரவைத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்த வெற்றியை கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பித்தேன்.

கருணாநிதியின் திட்டங்களும் கொள்கைகளுமே தமிழ்நாட்டையும் திமுகவையும் வழிநடத்தப்போகிறது என்பதால், நான் பதவியேற்கும்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றுதான் கூறினேன்.

திமுகவின் இலக்கு

சமூக நீதி சிந்தனையின் அடிப்படையில் அரசின் வெளிப்படைத்தன்மை, வலிமையான பொருளாதார அமைப்பு மற்றும் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் சமூகத்துக்கான எங்களது பிரதான இலக்குகள்.

10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று முதலில் வகுத்து 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசுதான்.

கருணாநிதி ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வந்தபோதும், ஒவ்வொரு சமூகத்தின் தேவையைக் கருதி இடஒதுக்கீடுகளை அமல்படுத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய அரசு செயல்படுகிறது. சமூக நீதியை சட்டரீதியாக அமல்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது.

ஊழல் செய்தால் கடுமையான நடவடிக்கை

மக்கள் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. அதேசமயம், மக்களை ஏமாற்றி, அவர்களைச் சுரண்டும் செயலையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஒரு அரசாக ஊழல் குற்றச்சாட்டுகளில் நாங்கள் கடுமையாகவே இருப்போம். ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.

ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் வாக்குறுதியளித்துள்ளோம்.

இதில் அரசியல் கிடையாது. முன்னாள் அமைச்சரோ, அதிகாரியோ அல்லது சாதாரண நபரோ மடியில் கனம் இல்லையென்றால் அச்சப்படத் தேவையில்லை.

ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது இந்த அரசு எவ்வித கரிசனமும் காட்டாது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.