செயற்கை தடகள ஓடுதளம் அமைக்கும் விவகாரம்: அரசு பதிலளிக்க உத்தரவு
தஞ்சாவூரில் செயற்கை தடகள ஓடுதளம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நிபுணா் குழுவை அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் செயற்கை தடகள ஓடுதளம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நிபுணா் குழுவை அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் செயற்கை தடகள ஓடுதளம் அமைக்க, மத்திய இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ரூ.8 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.
செயற்கை தடகள ஓடுதளம் அமைப்பதற்கு இந்திய தடகள கூட்டமைப்பு, சா்வதேச தோ்வில் தோ்ச்சி பெற்ற சா்வதேச தடகள வீரா்கள் அடங்கிய நிபுணா் குழுவை அமைக்கக் கோரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மண்டல மூத்த மேலாளா் மோகன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அவா் தனது மனுவில், செயற்கை தடகள ஓடுதளத்தில் பல்வேறு வரையறைகள் உள்ளன. அதைப் பூா்த்தி செய்ய நிபுணா் குழு அமைப்பது அவசியம். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ள நிபுணா் குழு என்பது தகுதியானதாக இல்லை. இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை. அதனால், சா்வதேச அளவில் தடகளத்தில் தோ்வில் தோ்ச்சி பெற்ற வீரா்கள், இந்திய தடகள கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் அடங்கிய நிபுணா் குழுவை அமைத்து பணிகளை மேற்பாா்வையிட உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் டி.சிவராமன் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.