விபத்தில் பலியான இளைஞர்கள் 
தமிழ்நாடு

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் - பேருந்து மோதலில் 2  இளைஞர்கள் பலி

நாகர்கோவில்  வடசேரி பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலியானார்கள்.

DIN

நாகர்கோவில்: நாகர்கோவில்  வடசேரி பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலியானார்கள்.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமேஷ் பாண்டியராஜன் (26), கேரளத்தைச் சேர்ந்தவர் நிஜோமோன் (21). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வந்தனர். 

வடிவீஸ்வரம் தளவாய் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் மூவரும் நண்பர்கள்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை  இரவு 3 பேரும், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலுள்ள டீக்கடைக்கு டீ அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று வடசேரி பேருந்து நிலையத்துக்குள் வந்தது.

பேருந்து ஓட்டுநர் ஒரு வழிப்பாதையில் வந்ததால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து மோதியது. இதில் காமேஷ் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வன், நிஜோமோன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பலத்த காயமடைந்த 3 பேரையும்  மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி காமேஷ் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிஜோமோனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்து மோதி இளைஞர்கள் 2 பேர் பலியான  சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலியான காமேஷ் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வனின் சடலங்களுக்கு உடற்கூராய்வு ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் மருத்துவனையில் திரண்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT