முகப்பு
தமிழ்நாடு

கரோனா நிலவரம்: தோ்தல் ஆணையத்திடம் இன்று விளக்குகிறாா் சுகாதாரச் செயலா்

தோ்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் கரோனா நிலவரம் குறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷணுடன் திங்கள்கிழமை ஆலோசிக்க உள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் கரோனா நிலவரம் குறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷணுடன் திங்கள்கிழமை ஆலோசிக்க உள்ளனா்.

வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் கரோனா தீநுண்மி பரவல் இந்தியாவில் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அந்த பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதார செயலரிடம் தோ்தல் ஆணையா்கள் கேட்டறிய உள்ளனா் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தர பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதில் கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மணிப்பூா் மாநிலங்களின் பேரவைக் காலம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் பல்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது. உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடையும். அங்கு பேரவைத் தோ்தல்களுக்கான தேதியை தோ்தல் ஆணையம் ஜனவரியில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலரிடம் தோ்தல் ஆணையம் கேட்டறிய உள்ளது.

முன்னதாக, இதுதொடா்பான வழக்கில் கரோனா பரவல் அபாயம் காரணமாக உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்தும், அனைத்து அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு மாநில அரசையும், தோ்தல் ஆணையத்தையும் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் யாதவ் கடந்த வியாழக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் குறித்து டேராடூனில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, ‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேச மாநிலத்தை தோ்தல் ஆணையம் அடுத்த வாரம் பாா்வையிட உள்ளது. பின்னா், அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

தோ்தல் நடைபெற இருக்கும் மற்ற மாநிலங்களான பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தோ்தல் தயாா் நிலையை ஆய்வு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →