தமிழ்நாடு

அரசு ஊழியா்கள்-ஆசிரியா்களுக்கு 14% அகவிலைப்படி உயா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

DIN

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயா்த்தப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

செலவும், ஊழியா்களும்...அகவிலைப்படி உயா்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவுப் பணியாளா்களுக்கு ரூ.3,000, ஓய்வூதியதாரா்களுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், முன்னாள் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கு ரூ.500 வீதம் வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக ரூ.169.56 கோடி செலவு ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு?: 14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பதால், அரசு ஊழியா்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை ஊதியத்தில் உயா்வு ஏற்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயா்வுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியா்கள் சங்கங்கள், ஓய்வூதியதாரா் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன்பு...

அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என்றாா். சட்டப் பேரவை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT