கரோனா நிவாரணம், மீட்பு பணிகளுக்கு ரூ.13,208 கோடி செலவு: ஆளுநர் உரையில் தகவல்
கரோனா நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, இதுவரை 13,208 கோடி ரூபாய், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து தமிழக அரசு செலவிட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை: கரோனா நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, இதுவரை 13,208 கோடி ரூபாய், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து தமிழக அரசு செலவிட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவிட்-19 பெருந்தொற்று நோயாலும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாலும், பொருளாதார வளர்ச்சியில் கணிசமான மந்தநிலையுடன் 2020-21 ஆம் நிதியாண்டு தொடங்கியது.
வருவாய் வரவினங்கள் கடுமையாகக் குறைந்து, கூடுதல் செலவினங்கள் பெரிய அளவில் ஏற்பட்ட போதிலும், இந்தக் கடினமான காலகட்டத்தில் நிதி நிலைமையை அரசு நேர்த்தியாக நிருவகித்தது. கோவிட்-19 மீட்டெடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவினங்கள், சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மூலதனச் செலவினங்கள் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் அதிகரிக்கப்பட்டன. கோவிட்-19 நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, இதுவரை 13,208 கோடி ரூபாய், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்தவோ, குறைக்கவோ இல்லை. உரிய நேரத்தில், செலவு குறைந்த கடன்களைப் பெற்றதன் மூலம், கோவிட்-19 பெருந்தொற்று நோயின் கடுமையான தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை இவ்வரசு பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.