முகப்பு
தமிழ்நாடு

உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா? தகனம் செய்யப்படுகிறதா?: நீதிமன்றம்

உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம்  குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம்  குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி  தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை, 10 நாட்களுக்கு பின்  உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே  இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு  முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 

அதில், உடற்கூறு ஆய்வு முடிந்த பின் 10 நாட்களுக்கு பின், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம் சடலங்கள் புதைக்கப்படுகிறது. சில சடலங்கள் கல்வி பயன்பாட்டுக்காக மருத்துவ கல்லூரிகளுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது.

உடல்களை தகனம் செய்வது என்பது மதம் சார்ந்த விஷயம். எனவே இந்த சடலங்கள் புதைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் அதற்கான காரணம்  குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →