நெல்லை மாவட்டத்தில் 2,829 பேருக்கு கரோனா தடுப்பூசி: மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 2,829 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 2,829 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு.
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நான்காம் கட்டமாக 50 வயதுக்கு மேல் உள்ள சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் உள்ளவர்களுக்கும், ஐந்தாம் கட்டமாக பொதுமக்களுக்கும் இத்தடுப்பூசி போடப்படவுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 11,949 பேர் கரோனா தடுப்பூசி போடுவதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள நிலையில், 2,829 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியால் இதுவரை மாவட்டத்தில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றார்.
முன்னதாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையம், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர தொடக்கநிலை கவனிப்பு மையம், மருத்துவம் சாரா பணியாளர்களின் குடியிருப்பு ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், புற்றுநோய் துறைத் தலைவர் மருத்துவர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.