பென்னாகரம் அருகே விடுதி காப்பாளர் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமுவேல் மனைவி ரதி (39). இவர், மாங்கரை அரசினர் மாணவியர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது 2 மகன்கள் மற்றும் பாட்டியுடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் கீழ் வீட்டை பூட்டிவிட்டு மேல் வீட்டில் உறங்கி வந்துள்ளனர். இதை அறிந்த மர்ம நபர் வியாழன் இரவு வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 8000 ரொக்கத்தை எடுத்து சென்றுள்ளான்.
காலையில் கீழே வீட்டிற்கு வந்த ரதி இதை அறிந்து ஒகேனக்கல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூத்தப்பாடியில் குடியிருப்பு மிகுந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.